![]() |
அரசனை கூட ஆண்டியாக்கிவிடும் கொரோனா காலம் இது. கடந்த நான்கு மாதத்துக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தொழில்,வர்த்தகத்துக்குஏற்பட்ட பாதிப்பு அளவிட முடியாது.
பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்து பாதாளத்தை நோக்கி ராக்கெட் வேகத்தில் பயணிக்கிறது. விளைவு எங்கு பார்த்தாலும் வேலையின்மை, தொழிலில் நஷ்டம் என்ற அவலநிலை. இப்படிப்பட்ட காலக்கட்டத்தில், தனியார் பள்ளிகள் வழக்கம்போல் கல்வி கட்டண வசூலில் இறங்க, ஏற்கனவே, கொரோனாவின் கிடுக்கிப்பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.
ஏனென்றால், சில நூறுகளில் பள்ளிப்படிப்பையும், சில ஆயிரங்களில் கல்லூரி படிப்பும் முடித்தது அந்த காலம். இதுதான் 1980கள் வரை நிலைமை. ஆனால், தற்போது, குறைந்தபட்சம் அரை லட்சமாவது இருந்தால்தான் தனியார் பள்ளியில் படிக்க முடியும்.
இதுதவிர பள்ளி வேன் அல்லது ஆட்டோ, டியூஷன், சீருடை, செலவை கணக்கிட்டால் மொத்த செலவு லட்சத்தை கண்டிப்பாக தாண்டிவிடுகிறது சென்னை போன்ற பெரு நகரங்களில். சாதாரண நாட்களில் கஷ்டமோ, நஷ்டமோ கடனை வாங்கியாவது பள்ளி கல்வி கட்டணத்தை செலுத்தி தங்கள் பிள்ளைகளை பெற்றோர் படிக்க வைத்தனர்.
ஆனால், சாப்பிடுவதற்கே பணக்கஷ்டம் என்ற நிலையில் பெற்றோர் படும்பாடு சொல்லில் அடங்காது. இந்தநிலையில், பொதுமக்களின் கஷ்டத்தை உணர்ந்து தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்று கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி அரசாணை ஒன்றை பிறப்பிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பள்ளிகள் ஊதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மாணவர்களிடம் இருந்து கல்வி கட்டணம் ஒன்றுதான் பள்ளிகளின் ஒரே வருவாய். அதற்கு தடைபோட்டுவிட்டு சம்பளத்தை கொடு என்றால் எங்கே போவது என்று கொதித்த பள்ளிகள், உயர் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டின.
ஐகோர்ட்டும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் 2020-21ம் கல்வி ஆண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவீதத்தை ஆகஸ்ட் இறுதிக்குள்ளும், 35 சதவீதத்தை பள்ளிகள் திறந்து 2 மாதத்துக்குள் வாங்கிக்கொள்ளலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது. ஆனால் முழு கல்வி கட்டணத்தையும் மொத்தமாக ஒரே தவணையாக கட்ட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் வற்புறுத்துவதாக பெற்றோர்கள் புகார் செய்தனர். இதனால் மீண்டும் ஐகோர்ட்டின் கதவுகள் தட்டப்பட்டது. இந்த முறை தட்டியது தமிழக அரசு.
விளைவு, எந்தெந்த பள்ளிகள் நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது என்ற விவரத்தை கேட்டிருக்கிறார் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ். அத்தோடு, முழு கல்வி கட்டணத்தை வசூலிக்கும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
பள்ளிகள் நிதி நெருக்கடியில் உள்ள போதும், மக்களும் அதே நிதிநெருக்கடியில் உள்ளதை உணர்ந்து நீதிக்கு தலைவணங்கி, கல்வி கட்டணத்தில் 40 சதவீதத்தை மட்டும் வசூலிப்பதுதான் சரி. கல்வி கற்பிக்கும் பள்ளிகளே நீதிமன்றத்தை மீறுவது நியாயமா?
No comments:
Post a Comment