We Give Everything First

Saturday, August 1, 2020

தினகரன் தலையங்கம்(01.08.2020) - போர்ப்பறவை



பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் அதிநவீன போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்திருந்தது. இதனால் இந்திய ராணுவத்துக்கு பலம் கூடியுள்ளது. பிரான்சில் இருந்து 5 ரபேல் போர் விமானங்கள் அரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்துக்கு வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டிலேயே மீதமுள்ள 5 விமானங்கள் பயிற்சிக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 


பிரான்ஸ் நாட்டில் இருந்து 7 மணி நேரம் பயணித்து 7 ஆயிரம் கி.மீ கடந்து வந்துள்ள ரபேல் அதிநவீன போர்ப்பறவை வானத்தில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் போதே எரிபொருளை நிரப்பிக்கொள்ளும் திறன்வாய்ந்தது. இந்த விமானங்கள் விரைவில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளது.


ரபேல் போர்விமானம் ஒரு இருக்கை கொண்டதாகவும், பயிற்சி விமானம் இரண்டு இருக்கை கொண்டதாகவும் இருக்கும். ரஷ்யாவிடமிருந்து சுகோய் விமானங்களைஇந்தியா வாங்கி 23 ஆண்டுகள் கடந்த பிறகு அதிநவீன போர் விமானமான ரபேலை பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ளது. 


வானத்தில் பறக்கும் போதே எதிரி விமானத்தை துல்லியமாக தாக்கவும், ரேடாரில் சிக்காமல் கண்ணாமூச்சி காட்டும் திறனும், தரையில் தொலைதூர இலக்குகளை குறிவைத்து தாக்கும் வல்லமையும் கொண்டது ரபேல் விமானங்கள். ஒரு விமானம் 10 ஆயிரம் கிலோ ஆயுதங்களை ஏற்றிச்செல்லும் திறன்பெற்றது. போர்க்கப்பலில் தரை இறங்கவும், நினைத்த இடத்தில் வேகத்தை குறைத்து தரை இறங்கவும் திறனுடையது. 


இந்தியா வாங்கக்கூடிய 36 விமானங்களில் 30 விமானங்கள் போருக்காவும், 6 விமானங்கள் பயிற்சிக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளது.


சீனா, ஐந்தாம் தலைமுறை ஜெ-20 போர் விமானங்களை வைத்துக்கொண்டு இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் ரபேல் வந்த பிறகு அவர்கள் நமது நாட்டு எல்லையை நெருங்க இனி ஒருமுறைக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டியதிருக்கும். இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து எல்லையில் இருந்து படைகள் திரும்ப பெறப்பட்டாலும், சீன ராணுவம் திடீரென எல்லையில் கூடாரம் அமைத்து அச்சுறுத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.


நமது ராணுவமும் அவர்களுக்கு எதிராக படைகளை குவித்து எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்திய கடற்படையும் இந்திய பெருங்கடல் பகுதியில் போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தின் பலம் ரபேல் போர் விமானம் மூலம் உலகளவில் உயர்ந்து நிற்கிறது. நாட்டின் பாதுகாப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ள ரபேல் போர்ப்பறவையை சல்யூட் அடித்து வரவேற்போம்.

No comments:

Post a Comment