We Give Everything First

Sunday, July 5, 2020

கொரோனாவுக்கு `கோவாக்சின்' தடுப்பு மருந்து... சாதித்த தமிழக விவசாயி மகன் கிருஷ்ணா எல்லா!



`கோவாக்சின்' (COVAXIN) என்ற அந்த மருந்துக்கான பல்வேறு கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில், இந்தியாவின் மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அதை மனிதர்கள் மீது பரிசோதித்துப் பார்க்க அனுமதித்துள்ளது. உலகின் மிகவும் விலை குறைந்த `ஹெபடைடிஸ்’ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த, உலகில் முதன்முறையாக `ஸிகா’ வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்த நிறுவனம்தான் இப்போது கொரோனாவுக்கும் மருந்து கண்டுபிடித்துள்ளது.


இவ்வளவு பெரிய சாதனையைச் செய்த நிறுவனத்தை நிறுவியவர், ஒரு தமிழக விவசாயியின் மகன் என்பது கூடுதல் சிறப்பு. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நெமிலியில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவரது பெயர் முனைவர் கிருஷ்ணா எல்லா (Dr.Krishna Ella). படிப்பை முடித்துவிட்டு விவசாயத்தில் ஈடுபடுவதுதான் கிருஷ்ணாவின் முதல் திட்டமாக இருந்தது. ஆனால், குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக அவர் `பேயர்’ என்ற மருந்து மற்றும் வேதிமப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் விவசாயத் துறையில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு பணியிலிருந்தபோதுதான், `பசியிலிருந்து விடுதலை (Freedom from Hunger)' என்ற ரோட்டரி திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைத்து அமெரிக்கா சென்று மேற்படிப்பு படித்தார்.



ஹவாய் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை 1995-ல் முடித்தார். இந்தியாவுக்குத் திரும்பவிரும்பாத கிருஷ்ணாவை, அவருடைய தாயார்தான் கட்டாயப்படுத்தி இங்கு வர வைத்ததாகவும் இப்படியொரு மருந்து நிறுவனத்துக்கான விதையை ஊன்றியதாகவும் 2011-ம் ஆண்டு, ஜனவரி மாதம் `ரெடிஃப்’ இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் கையிலிருந்த உபகரணங்களை வைத்துச் சிறிய பரிசோதனைக் கூடம் ஒன்றை அமைத்தார். 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தச் சிறிய பரிசோதனைக் கூடம்தான், இன்று கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை பரிசோதனை செய்துவரும் பாரத் பயோடெக். பொதுச் சுகாதாரத் துறையின் பாதுகாப்பில் பங்கு வகிக்க வேண்டுமென்பதே அப்போது அவருடைய நோக்கமாக இருந்தது. அதன் விளைவாகவே அனைவருக்கும் ஏற்ற வகையில் விலை குறைவான ஹெபடைடிஸ் மருந்தைக் கண்டுபிடிக்க முனைந்தார். 12.5 கோடி ரூபாய் முதலீட்டில் அந்த மருந்துக்கான முன்மொழிதலை உலக அளவில் முதன்முதலாக பாரத் பயோடெக்தான் முன்வைத்தது. அவர்களுடைய முன்மொழிதலின்படி, ஒரு ஹெபடைடிஸ் தடுப்பு மருந்தின் அப்போதைய விலை ஒரு டாலர். அதே ஹெபடைடிஸுக்காக மற்ற நிறுவனங்கள் முன்வைத்த மருந்தின் விலை சுமார் 35 முதல் 40 டாலர்கள் வரை இருந்தது.



ஆரம்பத்தில் அவர்களுக்கு நிதியுதவி கிடைக்கவில்லை. அதனால், ஐ.டி.பி.ஐ வங்கியிடம் 2 கோடி ரூபாய் கடனுதவி பெற்று அந்த மருந்து தயாரிப்பில் ஈடுபட்டனர். 1999-ம் ஆண்டில், அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்த நிறுவனம் கண்டுபிடித்த ஹெபடைடிஸுக்கான மலிவு விலையிலான மருந்தை வெளியிட்டார். அதன்பிறகு தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ், 10 ரூபாய்க்கு ஒரு மருந்து என்ற விகிதத்தில் 35 மில்லியன் டோஸ்களை அவரது நிறுவனம் உற்பத்தி செய்தது. அதைத் தொடர்ந்து 65 நாடுகளுக்கு 350 முதல் 400 மில்லியன் டோஸ்களை விநியோகித்தது. இது முதல்கட்டமாகக் குறைந்த முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் செய்த மிகப்பெரிய சாதனை.


முனைவர் கிருஷ்ணா எல்லாவின் சாதனைகள் இதோடு நிற்கவில்லை. இந்தியாவில் முதன்முறையாக மாசுபடுத்தும் தொழிற்சாலைகளற்ற, உயிரியல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் திட்ட ஆலோசனையை 1996-ம் ஆண்டு, அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் இவரே முன்வைத்தார். உடனடியாக அனுமதியும் அதற்கான நிலமும் கிடைக்கவே, ஜீனோம் வேலி (Genome Valley) என்ற பெயரில் ஓர் உயிரியல் தொழில்நுட்பப் பூங்காவை அமைத்தார். அந்தப் பூங்காவில் அமைக்கப்பட்ட முதல் ஆலை, ஹெபடைடிஸ் மருந்து உற்பத்தி ஆலைதான்.


அவர் முதன்முதலாகப் பணிபுரிந்த பேயர் பயோசைன்ஸ் நிறுவனம் முதல் பல்வேறு பன்னாட்டு மருந்து நிறுவனங்களும் இன்னும் பல இந்திய நிறுவனங்களுமாக நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளும் இப்போது ஜீனோம் வேலி உயிரியல் பூங்காவில் செயல்படுகின்றன. பின்னர் இதை முன்னுதாரணமாக வைத்து, பெங்களூரு மற்றும் பூனேவில் இதேபோன்ற உயிரியல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்கப்பட்டன. ரெடிஃப் இதழுக்குக் கொடுத்த பேட்டியில், ``மூன்று உயிரியல் தொழில்நுட்பப் பூங்காக்கள் இருந்தாலும்கூட, உலகத் தரத்தில் முதல் மூன்று இடங்கள் அமெரிக்காவுக்கே கிடைத்துள்ளன. ஏனென்றால், இந்தியாவில் பொதுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காகச் செய்யப்படும் ஆராய்ச்சிகள் மிகவும் குறைவு. ஆராய்ச்சித் துறையில் அந்தப் பக்கமாக நம்முடைய கவனம் அதிகமாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வாங்கியவர் முனைவர் கிருஷ்ணா எல்லா. உலக அளவில் ஸிகா வைரஸுக்கு முதன்முதலாக மருந்து கண்டுபிடித்த பெருமையும் இவருடைய பாரத் பயோடெக் நிறுவனத்தையே சேரும். 


``ஒரு நிறுவனம், சாதாரண எளிய மனிதர்கள் அணுகக்கூடிய விதத்தில் மருந்துகளைத் தயாரித்தால், அதன் தரத்தில் குறைபாடு உள்ளதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுவது இங்கு வழக்கமாகிவிட்டது. அந்தக் குற்றச்சாட்டை நாங்களும் எதிர்கொண்டோம். ஆனால், தொழில்நுட்பம் எளிய மனிதர்களைச் சென்றடையும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இங்கு எந்தவொரு குடிமகனும் உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காமல் தவிக்கக் கூடாது. எங்கள் நிறுவனம், அனைவருக்கும் கிடைக்கக்கூடிய மலிவு விலையில் மருந்துகளைத் தயாரிக்க முனைவதற்கும் அதுவே காரணம்" என்று 2011-ம் ஆண்டு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.



ஆம், இப்போது கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை அவர்களால் கண்டுபிடிக்க முடிந்தமைக்கும் அதுவே காரணம். ஒருவருடைய நோக்கம் மக்களின் நலனாக இருக்கும்போது, அவர் எண்ணிப் பார்க்காத உயரத்தைக்கூட அவரால் எட்டமுடியும். அதற்கு முனைவர் கிருஷ்ணா எல்லா ஒரு முன்னுதாரணம். இப்போது உலகம் முழுக்கவே கொரோனா தடுப்பு மருந்துக்கான டிமாண்டு அதிகமாக இருக்கிறது. ஆரம்பகட்டத்தில் 30 கோடி டோஸ்களை ஓராண்டுக்கு உற்பத்தி செய்யப்போவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் பல்வேறு நிறுவனங்களோடு இணைந்து மேலதிகமாக உற்பத்தி செய்யவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் தற்போது சுமார் 140 தடுப்பு மருந்துகள் கொரோனா நோய்த் தொற்றுக்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 16 மருந்துகள் மனிதர்கள் பரிசோதிக்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளன. அதில் ஐந்து தடுப்பு மருந்துகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டவை. அதுபோக, மூன்று அமெரிக்காவிலும் இரண்டு இங்கிலாந்திலும் ஜெர்மனி, ரஷ்யா, ஆஸ்திரேலியாவில் தலா ஒரு தடுப்பு மருந்தும் அடக்கம். இந்தப் பட்டியலில் உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்ட மருந்தோடு (கோவாக்சின்) இந்தியாவும் சேரக் காத்திருக்கின்றது. அந்தப் பெருமை, தமிழக விவசாயியின் மகனுடைய நிறுவனமான பாரத் பயோடெக்கையே சேரும்.

No comments:

Post a Comment