We Give Everything First

Friday, July 24, 2020

ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி பணிக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு



ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பணிகளுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 1967-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனத்துக்காக தமிழக அரசால் மத்திய அரசுக்கு 333 ஏக்கர் நிலம் வென்லாக்டவுன்ஸ் மற்றும் புரூக்காம்ப்டன் காப்புக்காடுகளில் இருந்து இலவசமாக ஒதுக்கப் பட்டது. அதன்பிறகு ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் பணிகள் நிறுத்தப் பட்டது. இதனால் அந்நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க மாவட்ட ஆட்சியர் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார். 


இந்த உத்தரவை ரத்து செய்து, அப்பகுதியில் நடைபெற்று வரும் தமிழக அரசின் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன் தற்போது அப்பகுதியில் நடைபெற்று வரும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும், என கோரினார். 


அதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி தற்போது அந்த இடத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி, மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தார். மேலும், இந்த கட்டுமானப் பணிகள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment