We Give Everything First

Thursday, July 30, 2020

தினகரன் தலையங்கம்(30.07.2020) - மக்களின் எதிர்பார்ப்பு






கொரோனா வைரஸ் விஷயத்தில் ஆரம்பத்திலேயே மத்திய அரசு சுதாரித்து,வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களுக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுத்து, தனிமை முகாம்களில் வைத்து சிகிச்சை அளித்திருந்தால் நிலைமை இந்தளவுக்கு மோசமாக வந்திருக்காது. 


தமிழகத்தில் கொரோனா வைரஸ் நுழைந்தபோதே ‘வலுவான கடிவாளம்’ போட்டு இருந்தால், கொரோனா கட்டுக்குள் இருந்திருக்கும். கொரோனா விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தின் விளைவாக மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஊரடங்கு கொரோனா பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை. பல மாதங்கள் கடந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாற்று வழிமுறைகளை உருவாக்கி இருக்கலாம்.


இனியாவது புதிய திட்டங்களை செயல்படுத்தும் முயற்சியில் அரசு இறங்க வேண்டும். சமீபகாலமாக கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பலியை கட்டுப்படுத்தினால் தான் மக்களிடம் உள்ள அச்சம் நீங்கும். எனவே பரிசோதனையை அதிகப்படுத்தி, நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே கொரோனா பலியை கட்டுக்குள் கொண்டு வர முடியும். 



கொரோனா பாதிப்பு குறைந்து வரும் பகுதிகளில், மீண்டும் கொரோனா பரவல் பாதிக்க தொடங்கினால், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆராய வேண்டியது கட்டாயம். முக்கியமாக, மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.


வெயில் காலத்திலேயே கொரோனா கட்டுக்குள் வரவில்லை. மழைக்காலத்தில் கொரோனா பரவல் படுவேகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. கணிக்க முடியாத வகையில் கொரோனா பரவி வருவதால், தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம். இவ்விஷயத்தில் சிறிதும் அலட்சியம் ஏற்பட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். 


ரேஷன் கடை மற்றும் டீக்கடைகளில் ‘கபசுர’ குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் கொரோனா சில பாடங்களை, அரசுக்கு உணர்த்தி வருகிறது. ஒருபகுதியில் பாதிப்பு குறைந்தால், பிற பகுதிகளில் பாதிப்பு உயர்கிறது.


இதே நிலை தொடர்ந்தால் கொரோனாவை கட்டுப்படுத்துவது கேள்விக்குறியாகி விடும். தமிழகத்தில் 22 மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை உயர்வதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு கொரோனா அழுத்தமாக உணர்த்தி வருகிறது. பள்ளிகளில் நமது பாரம்பரிய உணவை மாணவர்களுக்கு வழங்கலாம். 


பாரம்பரிய உணவுகள் தான் நம்மை காப்பாற்றி வருகிறது என்பதை உணர்ந்து, விவசாயத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இனியாவது ஊரடங்கு தளர்வு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அமைய வேண்டும். 


மீண்டும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால், கொரோனாவை முழுமையாக வேரறுக்கும் முயற்சியில் அரசு இறங்க வேண்டும். பலி மற்றும் பாதிப்புக்கான காரணங்களை சொல்வதை விட்டு விட்டு, கொரோனா இல்லா சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் அரசு இறங்க வேண்டும். இதைத்தான் மக்களும் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment