We Give Everything First

Sunday, August 2, 2020

ஹெட்ஃபோன்களில் அதிக சத்தம்… செவித்திறன் பாதிக்கலாம்!


ஹெட்ஃபோன்… இன்றைக்கு தவிர்க்கமுடியாத ஒரு சாதனமாகிவிட்டது, இது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வந்த ஹெட்ஃபோனை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன. அறிவியல் வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக விஷயங்களுக்கு பயன்படுத்துவதில் தவறில்லை. அதனால் அழிவு ஏற்பட்டால் அதைத் தவிர்ப்பதே நல்லது.



வாகன இரைச்சல்:
வாகனப் பயணத்தின்போது செல்போனில் அழைப்பு வந்தால் அதை பயன்படுத்த ஹெட்ஃபோன் உதவியாக இருக்கிறது. ஆனால், அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இன்றைக்கு பலர் முழுநேரமும் ஹெட்ஃபோனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். போனில் பேசுவதற்காக மட்டுமல்லாமல் பாட்டு கேட்பதற்கும் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.


பஸ் பயணத்தின்போதும், ரெயில் பயணத்தின்போதும், இருசக்கர வாகன பயணத்தின்போதும் பலர் ஹெட்ஃபோனைப் பயன்படுத்துகிறார்கள். பொது இடங்களில் செல்லும்போது வாகன இரைச்சல் கேட்கும்போது பலர் ஹெட்ஃபோனில் சத்தத்தை அதிகரித்து வைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


இது டிஜிட்டல் உலகம் என்பதால், பக்கத்தில் சத்தம் கேட்பதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பலர் ரம்மியமான, மனதுக்கு இனிமையான பாடல்களைக் கேட்டுக்கொண்டே தங்களது மற்ற பணிகளையும் தொடர்கின்றனர். ஹெட்ஃபோனில் ஒருவர் கேட்கும் சத்தம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கேட்குமளவுக்கு சத்தம் இருக்கிறது.


அத்தியாவசியப் பணிகளின்போது ஹெட்ஃபோன் பயன்படுத்துவதில் தவறில்லை. நீண்ட நேரம் நாள்கணக்கில் பயன்படுத்தினால் செவிப்பறையில் பாதிப்பு ஏற்பட்டு செவித்திறன் குறைய வாய்ப்புகள் அதிகம். ஹெட்ஃபோன் மூலம் வெளிப்படும் சத்தத்தால் ஒருமுறை செவித்திறன் குறைபாடு ஏற்பட்டால் இழந்த சக்தியை மீண்டும் பெற முடியாது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.


டெசிபல் அதிகம்:
ஹெட்ஃபோன் பயன்படுத்தும் பலருக்கு காதுக்குள் மணி அடிப்பதுபோன்றோ, கடல் அலையின் சத்தம் போன்றோ, சலசலவென்று நீரோடை பாய்வதுபோலவோ அல்லது வேறு சில இனம்புரியாத சத்தமோ கேட்கும். இந்த சத்தம் சில நிமிடங்களில் நின்றுவிடும். தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அது மோசமான பிரச்சினையின் அறிகுறி என்று பொருள்.


ஹெட்ஃபோனை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் மட்டுமன்றி நினைவுத்திறன் குறைவதுடன் மனநோய் வரவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதை கருத்தில்கொண்டு ஹெட்ஃபோன் பயன்படுத்தும் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.


பொதுவாக, 85 டெசிபல் முதல் 100 டெசிபல் அளவு வரை இசையைக் கேட்டாலே செவித்திறன் பாதிக்கப்படலாம். இத்தகைய சூழலில் 120 டெசிபல் உள்ள ஹெட்ஃபோன்கள் மிகச் சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கின்றன. அதிக சத்தத்தால் காது கேட்கும் திறன் முழுமையாக பறிபோகலாம். இதில் கவனம் செலுத்தாவிட்டால் காதுகளை யாராலும் காப்பாற்ற முடியாது.

No comments:

Post a Comment