We Give Everything First

Saturday, August 8, 2020

தினத்தந்தி தலையங்கம்(08.08.2020) - தொழில் வளர்ச்சிக்கு எல்லா கட்சிகளின் பங்களிப்பு!

 


தற்போது உலகில் செல்போன் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இணைபிரியாத ஒரு சாதனமாகிவிட்டது. தமிழ்நாட்டில் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்றளவில், எல்லோருடைய கையிலும், பையிலும், வீட்டிலும் செல்போன் இருக்கிறது. வீட்டிற்கு ஒரு போன் என்றநிலை மாறி, ஆளுக்கு ஒரு போன் என்றநிலை உருவாகிவிட்டது. செல்போன் பயன்பாடும் வெறுமனே பேசுவதற்கு என்பதையெல்லாம் தாண்டி, வங்கி பரிமாற்றம், தகவல் பரிமாற்றம், ஏன் இப்போது ஆன்லைன் மூலம் கல்வி என்று உலகத்தையே ஒரு உள்ளங்கைக்குள் அடக்கும் வகையில், பல பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கிறது.


சாதாரண செல்போன், ஆன்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பவர்களின் கனவெல்லாம் ஆப்பிள் ஐபோன் வாங்கவேண்டும் என்பதுதான். ஆப்பிள் ஐபோன் புதிய மாடலை வெளியிடும்போது கடும் கிராக்கி இருக்கும். அமெரிக்காவில் முந்தையநாள் இரவிலிருந்தே, முதல்நாளே வாங்கிவிட வேண்டும் என்பதற்காக நீண்ட “கியூ” நிற்பது வழக்கம். இந்தநிலையில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்பட்டுள்ள பாக்ஸ்கான் நிறுவனம், லேட்டஸ்ட் ஐபோன் மாடலான ஐபோன்-11 உதிரிபாகங்களை இணைத்து செல்போன் தயாரிக்கும் உற்பத்தியை தொடங்கிவிட்டது. இனி ஐபோன்-11-ஐ வாங்குபவர்கள் இது இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது என்பதை அறிந்துகொள்வார்கள். இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.


மறைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி ஒருமுறை, “வெற்றிக்கு பல இறகுகள் உண்டு. ஆனால், தோல்வி மட்டும் யாரும் சொந்தம் கொண்டாடாத அனாதைபோல நிற்கும்” என்றார். அதற்கேற்ப பா.ஜ.க., அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 3 கட்சிகளுமே இந்த தொழிற்சாலை ஐபோன்-11 உற்பத்தியை தொடங்கியதற்கு நாங்கள்தான் காரணம் என்று மார்தட்டிக்கொள்கிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “ஸ்ரீபெரும்புதூரில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் இப்போது மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துவிட்டது. முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவேண்டும் என்ற எங்களுடைய தொடர் முயற்சி இப்போது சாதகமான விளைவுகளை தந்துள்ளது” என்று கூறியுள்ளார்.


தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் எம்.பி., “ஸ்ரீபெரும்புதூரில் 2006-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட பாக்ஸ்கான் நிறுவனத்தில் ஆப்பிள் ஐபோன்-11 உற்பத்தியை தொடங்கியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் விதைத்த விதை இந்த அளவு வளர்ச்சிபெற உதவியாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். 



பா.ஜ.க.வும் விட்டுவிடவில்லை. மத்திய சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர், “2017-ம் ஆண்டு ஐபோன் எஸ்.இ., 2018-ம் ஆண்டு ஐபோன்-6 எஸ், 2019-ம் ஆண்டு ஐபோன்-7 மற்றும் எக்ஸ்.ஆர்., 2020-ம் ஆண்டு ஐபோன்-11 என்று தொடர்ந்து வெளிவந்தது, செல்போன் உற்பத்தி தொழில் பிரதமர் நரேந்திரமோடியால் எவ்வாறு வளர்க்கப்பட்டுள்ளது என்பது இந்த தொடர் பட்டியலில் இருந்தே தெரிகிறது. இது ஒரு தாழ்மையான தொடக்கம்” என்று தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் தொடங்கி, மறைந்த முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என எல்லோரது ஆட்சியிலும் தொழில் வளர்ச்சி தழைத்தோங்கி முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்திருக்கிறது என்றால், அதில் மாறுபட்ட கருத்தே இல்லை. 


கடந்த சில ஆண்டுகளாக அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே, யார் ஆட்சியில் அதிக தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன? என்பதற்கு, ஒரு ஆரோக்கியமான போட்டியே நிலவியிருக்கிறது. குறிப்பாக, மறைந்த முதல்-அமைச்சர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் அடிக்கடி, “எங்கள் ஆட்சியில் நாங்கள் தொடங்கியுள்ள தொழிற்சாலைகளின் பட்டியலை பாரீர்.. பாரீர்..” என்று மக்களிடையே வெளியிடுவது வழக்கம்.


தொழில் வளர்ச்சியில், எல்லோருடைய ஆட்சி பங்களிப்பையும் பற்றி சொல்லவேண்டும் என்றால், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடலில்வரும், “ஒருவருக்கொருவர் குறைந்தவர் அல்ல, இவருக்கு அவரே மேல் என்று சொல்ல..” என்றுதான் பதிலளிக்க வேண்டியது இருக்கும்.


No comments:

Post a Comment