We Give Everything First

Saturday, August 8, 2020

தினகரன் தலையங்கம்(08.08.2020) - ராஜினாமா சர்ச்சை


 தீவிரவாதிகளின் தாக்குதல், பாகிஸ்தான் அவ்வப்போது எல்லையில் அத்துமீறல் போன்ற தொல்லைகளை அனுபவித்து வந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. சிறப்பு அந்தஸ்து 370வது பிரிவு நீக்கப்பட்டு அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் அறிவிக்கப்பட்டன. 


சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது பெரும் போராட்டங்கள் வெடித்தது. ஆனால் 144 தடையுத்தரவு பிறப்பித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த மத்திய அரசு மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து படிப்படியாக தடையுத்தரவை தளர்த்தியது. கடந்த ஓராண்டாக அந்த மாநிலத்தில் குறிப்பிடும்படியாக பெரிய தீவிரவாத செயல்கள் எதுவும் நிகழவில்லை. மக்களும் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திர மர்மு நியமிக்கப்பட்டார். ஓராண்டாக இப்பதவி வகித்த இவர் சமீப காலமாக மத்திய அரசுடனும், தேர்தல் ஆணையத்துடனும் மோதல் போக்கை கடைபிடித்தார். ஜம்மு காஷ்மீர் இணையதள சேவையை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், தனது பிரதேசத்தில் 4ஜி இணையதள சேவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் ஜம்மு காஷ்மீரில் சகஜ நிலை இன்னும் முழுமையாக திரும்பவில்லை என்றும் எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தான் வாலாட்டி வருவதால் பாதுகாப்புக்கு 4ஜி இணையதள சேவை அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு மறுத்துள்ளது.


மேலும் மாநிலத்தில் தேர்தல் நடத்தாமல் இழுத்தடிப்பது குறித்து தேர்தல் ஆணையத்தையும், மத்திய அரசையும் சர்ச்சைக்குரிய வகையில் மர்மு விமர்சித்தார். இவரது கருத்துக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்திருந்தது. ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மீது மத்தியஅரசுக்கு அதிருப்தி ஏற்பட்டது. நீறு பூத்த நெருப்பாய் இருந்த பிரச்னையை தொடர்ந்து துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி மர்மு தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார். 


இவரது கடிதம் ஏற்கப்பட்டு புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த மனோஜ் சின்ஹா மூத்த பாஜ தலைவர். மூன்று முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில் மர்மு தனது பதவியை ராஜினாமா செய்தது மத்திய அரசுடனான மோதல் காரணம் இல்லை என்றும் அவருக்கு முக்கிய பதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கணக்கு தணிக்கை துறையில் மர்முவுக்கு முக்கிய பதவி வழங்க பாஜ அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இவரது அனுபவத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது.


No comments:

Post a Comment