இந்த உலகில் மகிழ்ச்சி என்பது எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் ஏதோ ஒன்றை பறிகொடுத்தது போல எந்த நேரமும் சோகத்துடன் இருக்கிறார்கள். இவர்களின் சிந்தனையும் எப்போதும் எதிர்மறையாகவே இருக்கிறது. எதிர்மறையாகச் சிந்திபவர்கள் எந்த ஒரு செயலிலும் வெற்றி அடைய வெகுநாட்கள் ஆகும். சிலர் மட்டுமே சந்தோஷத்துடன் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர்.
அவர்கள் எதிர்மறையான எண்ணங்களை ஆக்கமுள்ளதாக மாற்றிக் கொண்டதே அதற்குக் காரணம். `ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார் புத்தர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கிறது. ஆனால், அந்த ஆசை நிறைவேறியவுடன் நாம் ஆசைபடுவதை நிறுத்திக் கொள்வதில்லை. வேறொன்றின் மீது நம் ஆசை திரும்புகிறது. நடந்து செல்லும்போது சைக்கிள் வாங்க வேண்டும் என்று தோன்றுகிற ஆசை, அது நிறைவேறியவுடன் `பைக்’ மீது திரும்புகிறது.
அது நிறைவேறியவுடன் கார் என இப்படியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போது நம்மிடம் இருக்கின்ற பொருள்களைக் கொண்டு திருப்தியடைகிறோமோ, அப்போதுதான் வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தோன்றும். வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. சில நேரம் வெற்றி கிடைக்கும். சில நேரம் தோல்வி கிடைக்கும். தோல்வியடையும் சமயங்களில், `நான் எப்போதும் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று புலம்பி அடுத்தகட்ட முயற்சியைக் கைவிட்டு விடுகிறார்கள். இதற்குக் காரணம் `நம்மால் முடியாது’ என்ற எண்ணமே. முதலில் அந்த எண்ணத்தைத் தூக்கி போட்டுவிட்டு, உங்களின் கடந்த கால வெற்றிகளை ஒரு தாளில் எழுதிக்கொண்டே வாருங்கள்.
நீங்கள் பெற்ற வெற்றியின் சாதனைபட்டியல் உங்களை அடுத்த வெற்றிக்கு அழைத்துச் செல்லும். ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் உயர்ந்தவராக இருப்பார். அழகு, படிப்பு, குணம், திறமை, செல்வம் இதில் ஒன்றோ அல்லது இரண்டோ ஒருவரிடம் இருக்கலாம். அதற்காக அந்தத் தகுதி நம்மிடம் இல்லையே என மற்றவரை ஒப்பிட்டு பார்த்து தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. நாமே சிறந்தவர் என உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டும். உங்களுடைய சாதனைகள், வெற்றிகள் சிறியதாக இருந்தாலும் அதை எண்ணி பெருமைபட வேண்டும். அதற்காக தற்பெருமைடன் திரியக் கூடாது.
வாழ்க்கையில் எல்லா மனிதர்களுக்கும் சந்தோஷமான சம்பவங்களும் உண்டு, கசப்பான சம்பவங்களும் உண்டு. கசப்பை ஜீரணித்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. `எனக்கு மட்டும் ஏன் எல்லாம் தப்பாகவே நடக்கிறது?’ என்று எண்ணி, அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்கள் பலர். வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை. அதை புரிந்து கொண்டு வெற்றிக்கான தேடலைத் தொடங்குங்கள். மற்றவருடைய வளர்ச்சியை பார்த்து சந்தோஷபடுபவர்களை விட, பொறாமைபடுபவர்களே அதிகம்.
ஒருவரை அழிக்கும் மிகபெரிய ஆயுதம் அவரிடம் உள்ள பொறாமைக் குணம்தான். ஒருவருடைய வெற்றியில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அவரை பார்த்து பொறாமைபடத் தேவையில்லை. அவரை பாராட்டி ஊக்கபடுத்துவதன் முலம் நாமும் முன்னேற முடியும். இப்படிச் செய்வதால் அவர் பெற்ற வெற்றி ஒருநாள் உங்கள் பக்கமும் திரும்பும். அதேநேரம் உங்களைவிடவும் அதிகமானோர் இன்னும் மேலே வர முடியாமல் இருக்கின்றனர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவருடைய வெற்றியை பார்த்து பொறாமைபடுவதை விட, அந்த வெற்றியை நாமும் அடைய முயற்சி செய்வது தான் சரியான வழி. அனுபவம் இல்லாமல் திடீரென ஒரு செயலில் இறங்கினால் தோல்விதான் கிடைக்கும். எனவே, பிறருடைய வெற்றியில் பங்கு கொண்டு, அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் புதிய முயற்சிகளை மேற்கொண்டால், சரியான வாய்புகள் வரும்போது வெற்றியை அடையலாம்.
ஒரே குறிக்கோளை அடைய எண்ணி இருவர் முயற்சி செய்யும்போது ஒருவரை மற்றவர் ஊக்கபடுத்தினால் வெற்றியின் இலக்கை விரைவில் அடையலாம். எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்து வருபவர்கள், தன்னை பற்றி ஒருபோதும் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கக் கூடாது. இதனால் நல்ல விமர்சனங்களை உருவாக்கக் கூடிய வாய்புகளை அவர்கள் இழக்கக் கூடும். எனவே, எதிர்மறையான விமர்சனங்களை எண்ணி நேரத்தை வீணாக்காமல், நல்ல விமர்சனங்களை உருவாக்குவதில் நேரத்தைச் செலவிடுங்கள்.
பிறருடன் ஆக்கபூர்வமாக பேசுவதே உங்களை பற்றிய நல்ல எண்ணத்தை பிறரிடம் ஏற்படுத்துவதுடன், நீங்களே உங்களை பற்றி உயர்வாக உணரவும் வழிவகுக்கும். எந்த ஒரு செயலையும் சிறப்பாகச் செய்ய அர்பணிப்பும், தெளிவான குறிக்கோளும் அவசியம். முதலில் உங்களுடைய குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை அடைவதற்கான வழிகளைக் கண்டுபிடிங்கள். அதற்காக உங்களின் சக்தி முழுவதையும் செலவழிங்கள்.
உங்களுடைய வாழ்க்கையையே அர்பணியுங்கள். அந்த செயலில் தோற்றால் அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெற்றால் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதையும் தாமதிக்காமல் உடனே செய்யுங்கள். பிறருடைய வெற்றியில் இருந்தோ அல்லது தோல்வியில் இருந்தோ உங்களுக்குத் தேவையானதை கற்றுக் கொள்ளுங்கள்.
அதிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் வாய்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி பெறுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன? எந்த விஷயங்களை புதிதாக சேர்த்துக் கொண்டார்? எந்த விஷயங்களை தம்மிடம் இருந்து விலக்கி வைத்தார்? போன்ற விஷயங்களை வெற்றி பெற்றவரிடம் இருந்தும், என்ன காரணத்திற்காகத் தோல்வியைத் தழுவினார் என்பதை தோல்வி அடைந்தவரிடம் இருந்தும் தெரிந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment