We Give Everything First

Saturday, July 18, 2020

தினகரன் தலையங்கம்(18.07.2020) - இடைநிற்றல் அதிகரிப்பு


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா பீதியால் 34,842 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதவில்லை. இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியானதால் இந்த மாணவர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர். 


இவர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் அனைத்து
பாடங்களும் எழுதும் வகையில் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கிடையில் பள்ளி இறுதி தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், பள்ளி இடைநிற்றலும் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


2017ம் ஆண்டு 9 லட்சம் மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வு எழுதியுள்ளார்கள். 2020ம் ஆண்டு இது 7.8 லட்சமாக குறைந்துள்ளது. இப்படி மாணவர்கள் எண்ணிக்கை குறைவதற்கு பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பிறகு மேல்நிலை கல்விக்கு செல்லாமல் இடைநிற்றல் அதிகரித்துவிட்டதா? இறுதி தேர்வை எழுதாமலோ, பிளஸ் 1 படிப்புக்கு பிறகு கல்வியை தொடராமலோ நின்று விடுகிறார்களா என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளது.  பிளஸ் 1 பொதுத்தேர்வும், மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட பாடச்சுமையும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவுக்கு காரணிகளாகவும் இருக்கலாம்.

எனவே பள்ளி கல்வித்துறை மாணவ, மாணவிகள் பள்ளி இடை நிற்றலுக்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது. மேலும் கல்வி நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் மாணவர்களின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டு இப்பிரச்னையை அணுக வேண்டும். பாடச்சுமையால் கணிதம், உயிரியல், இயற்பியல் போன்ற முக்கிய பாடப்பிரிவுகளை மாணவர்கள் தவிர்ப்பதாக தெரிகிறது. 


இதனால் பொறியியல், மருத்துவ படிப்புகளில் தமிழக மாணவர்களின் பங்கேற்பும் குறைகிறது. அடிப்படை தகுதியான பிளஸ் 2 தேர்வை எதிர்கொள்வதில் மாணவர்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி நிபுணர்களுடன் மாநில அரசு ஆலோசித்து அவர்கள் முழு மனத்திருப்தியுடன் பாடங்களை படித்து தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் கல்வி திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்தால் மட்டுமே பள்ளி இடைநிற்றலை தடுக்க முடியும்.

இந்த முயற்சியில் மாநில அரசு உடனடியாக ஈடுபட்டு உரிய தீர்வை தற்போதே எடுத்தால் தான், வரும் கல்வியாண்டில் காலடி வைத்துள்ள மாணவர்களுக்கு கல்வியின் மீதும் தங்கள் மீதும் நம்பிக்கை ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. பள்ளி இடைநிற்றல் அதிகரித்தால் உயர்கல்வியில் தமிழக மாணவர்களின் பங்கு மிக அரிதாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே, மாணவர்கள் நலனில் அரசு முழு கவனத்தை செலுத்தி அவர்களது பிரச்னையை தீர்த்துவைத்து சிறந்த கல்வியை அவர்கள் பெறுவதற்கு அனைத்து வகையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

No comments:

Post a Comment