We Give Everything First

Friday, July 17, 2020

தினகரன் தலையங்கம்(17.07.2020) - சுதந்திர தாகம்


கொரோனா சிறைக்குள் சிக்கித் தவிக்கும், விடுபட்டு வெளியேற வழிதெரியாமல் விழிபிதுங்கும் உலக மக்களின் இன்றைய கையறு நிலையை ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்...? ’ என்கிற மகாகவியின் ஒற்றை வரி கொண்டு விளக்கி விடலாம். ஒரு சுதந்திரமான வாழ்க்கை முறையை நாம் தொலைத்து நான்கு மாதங்களுக்கும் மேலாகிறது. கண்களுக்கெட்டும் தொலைவில் விடுதலை வெளிச்சம் தென்படவில்லை. பொருளாதார பலம் அசாத்தியமாகக் கொண்ட அமெரிக்காவே, கொரோனா பாய்ச்சலை எதிர்கொள்ள முடியாமல் மீண்டும் ஒரு முழுமையான ஊரடங்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 


மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், அவர்களது பொருளாதார தேவைகள் பாதித்து விடாத அளவுக்கு நிலைமையைக் கையாளவேண்டிய இடத்தில் இந்தியா இருக்கிறது.
கொரோனாவுக்கான மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை. நிச்சயமாக, ஊரடங்கு என்பது அதற்கான நிரந்தரத் தீர்வும் இல்லை. ஒரு மாதம் கெடுபிடியாக ஊரடங்கை அமல்படுத்தினால், தொற்று பரவல் குறைவது போல தெரியும். 


ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்ததும், பரவல் வேகமும் பழைய நிலைக்கு திரும்பி விடும். ஆகவே, ஊரடங்கைக் கடந்து, மாற்றுத் தீர்வை நோக்கிச் செல்லவேண்டிய மிக முக்கியமான இடத்தில் நாம் இருக்கிறோம். நான்கு மாதங்களாக தொடரும் ஊரடங்குகளால் நடுத்தர, அடித்தட்டு மக்கள் சந்தித்து வரும் சிரமங்கள், விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டவை. 


கல்விக்கட்டணம் கட்ட வழியின்றி, அதற்கான வருமானம் ஈட்ட வாய்ப்பின்றி... பிஞ்சுக் குழந்தைகளின் முகத்தைப் பார்க்க நாணிக் கிடக்கும் சாமானியப் பெற்றோர்களின் வலி, முடிவெடுக்கும் இடங்களில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. அவர்களின் பிழைப்புக்கு அரசு என்ன செய்திருக்கிறது?
பொதுப் போக்குவரத்து முற்றாக முடங்கிக் கிடக்கிறது. 


நாட்டின் பெரும்பங்கு மக்கள், தங்கள் அன்றாட பிழைப்புக்கான அடிநாதமாக பொதுப் போக்குவரத்தையே கொண்டிருக்கின்றனர். ஜூலை 31 வரை பொது போக்குவரத்துக்கான தடையை தமிழக அரசு நீட்டித்துள்ளது. பஸ்கள் இயங்கத் தொடங்கினால்... கிராமங்களுக்கும், நகரங்களுக்குமான மக்கள் பெயர்ச்சி அதிகரித்து தொற்று பரவல் கூடும் என காரணம் சொல்கிறார்கள். 


உண்மையாகவே இருக்கட்டும். கொரோனா அபாயம் இப்போதைக்கு முடிகிற பிரச்னையா? இன்னும் எத்தனை மாதங்களுக்கு கட்டுப்பாடுகள் என்ற பெயரில் சாமானிய மக்களை சோதித்துக் கொண்டிருக்கப் போகிறோம்? நிஜத்தில் அவர்கள் கொரோனாவை காட்டிலும், ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்புகளைக் கேட்டே அதிகம் அச்சமுறுகிறார்கள்.


நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நகைபறிப்பு, வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களுக்கு... நீட்டிக்கப்படும் ஊரடங்கும் ஒரு காரணம் என்றால், கேட்க கசப்பாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை. கொரோனா விழிப்புணர்வை மக்கள் மத்தியில் தொடர்ந்து விதைத்தபடியே, அவர்களை மீண்டும் ஒரு பாதுகாப்பான இயல்புக்கு படிப்படியாக கொண்டு செல்வதே இன்றைய தேவை. வாகனம் ஓட்டியோ, வடை விற்றோ கிடைத்த அந்த சொற்பப் பணத்திலும், மகா சுதந்திர வாழ்க்கை வாழ்ந்து வந்த, சாமானிய மக்களின் அந்த சுதந்திர தாகம்... என்று தணியும்? அரசாங்கங்கள் தான் பதில் சொல்லவேண்டும்.

No comments:

Post a Comment