We Give Everything First

Wednesday, June 17, 2020

தமிழ்நாடு அரசு சார்பில் தனியார் துறை வேலை இணையதளம் தொடங்கப்பட்டது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16–ந்தேதி (நேற்று) அன்று தலைமைச் செயலகத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில், தமிழ்நாட்டில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து, வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ ‘Tamil Nadu Private Job portal’ (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தை துவக்கி வைத்தார்.


தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள், இவ்விணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களின் கல்வித் தகுதி, முன்அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ற பணிவாய்ப்புகளை பெறுவதற்கும், தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இவ்விணையதளத்தில் பதிவேற்றம் செய்திடவும், அக்காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்வதற்கும் இவ்விணையதளம் வழிவகை செய்யும்.


வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு இச்சேவைகள், கட்டணமின்றி தமிழ்நாடு அரசால் வழங்கப்படும். ஏற்கனவே அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் சிறிய மற்றும் பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.


தற்போதைய சூழ்நிலையில், இதற்கு மாற்றாக ‘‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’’ மூலம் இணையவழி நேர்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் ஆகிய வசதிகளைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டிலுள்ள வேலைநாடும் இளைஞர்களை, இணைய வழியாக தொடர்பு கொண்டு, தனியார் துறை வேலையளிப்போர்கள் பணி வாய்ப்புகளை அளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநர் வி. விஷ்ணு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment