சமீபத்தில் பேஸ்புக்கில் பாஜ அரசுக்கு ஆதரவாக அதன் இந்திய கட்டுப்பாட்டு இயக்குனர் அங்கிதாஸ் என்ற பெண் நடந்து கொள்கிறார்; பேஸ்புக்கில் வெறுப்பு பேச்சுக்களை, மத உணர்வுகளை தூண்டும் தகவல்களை பதிவிடுவதை தடுக்காமல் விடுகிறார் என்று புகார் கிளம்பி கடைசியில் அவர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
அமெரிக்க வால்ஸ்ட்ரீட் ஜர்னல், பேஸ்புக் இந்தியாவில் நடக்கும் வெறுப்பு அரசியல் விஷயத்தில் கண்டுகொள்ளாமல் விடுகிறது என்று குற்றம்சாட்டி சில விஷயங்களை அம்பலப்படுத்தியது. இதையடுத்து தான் பெரிய பிரச்னை ஆனது.
இது ஒரு பக்கம் இருக்க, கொரோனா பற்றி அறிந்து கொள்ள மத்திய அரசு அமல்படுத்திய ஆரோக்கிய சேது என்ற ஆப் மீதும் காங்கிரஸ் புகார் கிளப்பியிருந்தது. இது தனியார் கட்டுப்பாட்டில் இயங்குவதால் தனி நபர் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தது. இதை அரசு புறந்தள்ளி விட்டது. கடந்த 2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் மூலம் 8.5 கோடி பேரின் தனிநபர் தகவல்கள் திருடப்பட்டு, அதன் மூலம் யாரை அவர்கள் அதிபராக விரும்புகின்றனர், அதிபராக வருபவர் என்ன செய்ய வேண்டும் என்று கண்டுபிடித்து அதற்கேற்ப அதிபர் வேட்பாளர் தன் போக்கை மாற்றி, வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டை கேம்பிரிட்ஜ் அனால்டிகா என்ற சைபர் துப்பறியும் நிறுவனம் கண்டுபிடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் மீது சில பேருக்கு நம்பிக்கை குறைந்தது. மேலும், பேஸ்புக் நிறுவனம் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்தது. அதன் மூலம் பேஸ்புக் பங்குச்சந்தையில் ஒரே நாளில் 11 ஆயித்து 900 கோடி டாலர் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேஸ்புக் மீது தான் இப்போது சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆளும் பாஜ கட்சிக்கும், முக்கிய எதிர்கட்சியான காங்கிரசுக்கும் பெரும் சர்ச்சைகள் பேஸ்புக் உட்பட சமூக வலைதளங்களில் தான் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் உணர்வுகளை, தகவல் பரிமாற்றங்களை கண்டறிந்து வருகின்றனர் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
கொரோனா பரவல் ஆரம்பத்ததில் இருந்து இதுவரை நோயாளிகள், பாதிக்கப்பட்டவர்கள், பரிசோதனை செய்தவர்கள் எல்லாரின் மருத்துவ, பொதுவான தகவல்கள் டிஜிட்டலில் தான் சேகரிக்கப்படுகின்றன. இந்த தகவல்கள் பல தனியாரிடமும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இதை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்றாலும், பேஸ்புக் மட்டுமின்றி, இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவற்றிலும் எவ்வளவு பெரிய தனி மனித தகவல்கள் திருட்டு நடக்கிறது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லையா என்று சமூக ஆய்வாளர்கள் கவலை கொள்கின்றனர்.
குறிப்பிட்ட நபர்களின் மருத்துவ தகவல்கள் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடப்போகிறது என்று நினைக்கலாம். ஆனால், பலவீனமான ஜனநாயகம், சுதந்திரம் இல்லா நீதித்துறை இரண்டும் உள்ள இடங்களில் இப்படிப்பட்ட தனி நபர் தகவல்கள் பெரிய அளவில் அரசியல் சர்வாதிகார போக்குக்கு வழிவகுக்கும் என்பதும் சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்டவை தான்.
கொரோனா பாதிப்பு காலங்களில் சேகரிக்கப்பட்ட தனி நபர் தகவல்கள் அனைத்தும் பல வகையில் அவர்களுக்கு பாதிப்பை தரலாம் என்ற எண்ணம் சிலருக்கு இல்லாமல் இல்லை. உள்ளூரில் உள்ள மக்களின் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற தகவல்களை அறிந்து கொள்ள இந்த கொரோனா கால தகவல்கள் போதுமானது.
சில மருத்துவமனைகள் கூட இதுபோன்ற தகவல்களை சேகரித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. இதை தடுக்க அரசால் எந்த அளவுக்கு முடியும் என்றும் தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம், அரசும் சரி, அரசு இயந்திரங்களும் சரி, தனியாரும் சரி, பல வகையில் மக்களின் தனி நபர் தகவல்களை சேகரிப்பது ஆபத்தானது என்பது மட்டும் எதிர்காலத்தில் நிரூபணமாகும் என்று சமூக ஆய்வாளர்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர். பேஸ்புக் விவகாரம், கொரோனா கால தனி நபர் தகவல்கள் விவகாரம் இரண்டும் வரும் நாடாளுமன்ற தொடரில் பெரும் புயலை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.
* ரத்த அழுத்தம் மாறினால் அமைச்சர் பதவி பறிப்பு
வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜோங்க் யுன் பாணியே தனி. தன் அமைச்சர்கள் கூட்டத்தில் தன் கொள்கை முடிவை அறிவித்ததும் அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் ரத்த அழுத்தத்தை அறிந்து கொள்வாராம். அதை வைத்து தான் யார் யார் தன் முடிவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். யார் எதிர் கருத்தை கொண்டுள்ளனர் என்பதை அறிந்து அவர்களை கண்காணிக்க உத்தரவிடுவாராம்.
* கைதட்டலை நிறுத்திய பத்திரிக்கை அதிபருக்கு சிறை
ரஷ்ய எழுத்தாளர் தத்துவ நிபுணர் அலெக்சாண்டர் சோல்ஸ்ஹெனிஸ்டின் ‘குலாக் ஆப் ஆர்ச்பெலிகோ என்ற புத்தகத்தை 90 களில் எழுதினார். சோவியத் யூனியன் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் கொடூர குணத்தை அவர் எழுதியுள்ளார். ஸ்டாலின் உரையை முடிக்கும் போது கைதட்டலை பார்வையாளர்கள் அவர் கையமர்த்தும் வரை விடமாட்டார்கள். அப்படியே நடுவே யாராவது கைதட்டலை நிறுத்தினால் என்ன கதி என்பதற்கு சிலர் உதாரணமாக இருந்தாலும், ஒரு பத்திரிக்கை அதிபர் பற்றி அலெக்சாண்டர் குறிப்பிட்டிருந்தார். அந்த பத்திரிக்கை அதிபரை கைது செய்த ராணுவம், சைபீரியாவில் ஆயுள் சிறையில் வைத்தது. அதன் பின் அவர் குடும்பமே என்னவானது என்பது பற்றி யாருக்கும் தெரியாது.
* தீவிரவாத இளைஞர்கள் பேஸ்புக்கில் தேர்வு
இஸ்ரேல் ஹைபா பல்கலைக்கழக ஆராயச்சியாளர் கேப்ரியல் பாய்மன் வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரையில், ஐஎஸ்ஐஎஸ் உட்பட உலகையே பயமுறுத்தும் தீவிரவாத அமைப்புகள் பலவும் தன் தீவிரவாத இளைஞர்களை சமூக வலைதளம் மூலம் தான் தேர்ந்தெடுத்து வருகின்றன. பிரிட்டனில் பல பிரபலங்களை தலைசீவி கொன்று வீடியோ வெளியிட்ட தீவிரவாத இளைஞன் ஜிகாதி ஜான் இப்படி தான் தேர்ந்தெடுக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு ஏன், பெரும்பாலான இந்திய இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தேர்வு செய்யப்பட்டதே இப்படி தான் என்பதும் கவனிக்கத்தக்கது. பல இளைஞர்களின் பேஸ்புக் உட்பட சமூக வலைதள பரிமாற்றங்களை சேகரித்து ஆராய்ந்து அவர்களின் வேகமான கருத்துக்களின் அடிப்படையில் அவர்கள் மனநிலையை அறிந்து தேர்வு செய்யப்படுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
* ஆர்வெல் சொன்னது 70 ஆண்டுக்கு பின் நிஜம்
அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் ஆர்வெல் 1949ம் ஆண்டு ‘1984‘ என்ற நாவலை எழுதியிருந்தார். இவர் எழுதிய 9வது மற்றும் இறுதி புத்தகம் இது. எல்லா புத்தகங்களுமே தடை செய்யப்பட்டவை. அதிலும், 1984 என்ற நாவல் மிகவும் பரபரப்பானது. ஒரு நாட்டின் தலைவர் மிக அதிகாரம் படைத்தவராக ஆகி விட்டால், பலவீனமான ஜனநாயகம் இருந்தால், மக்கள் எப்படி எல்லாம் சிக்கித்தவிப்பர்; தேர்தலில் அவர் தான் எப்போதும் தேர்வு செய்யப்படுவதற்கு ஆயத்தங்களை செய்வார்.
சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் எல்லா உணர்வுகளும், எண்ணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு,பெரியஅளவில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு தங்கள் வசம் வைக்க எல்லா வகையிலும் சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்துவார் என்றெல்லாம் அந்த நாவலில் எழுதப்பட்டுள்ளது. சொன்னதற்கு ஏற்ப 1984ல் இருந்து தான் பல அரசியல் மாற்றங்கள், ஜனநாயக சர்வாதிகாரம், சமூக வலைதளங்கள் மூலம் மக்களை கட்டுப்பாட்டில் வைப்பது போன்றவை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்று சமூகவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Source: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=613218
No comments:
Post a Comment