’’நீ எத்தனை சினிமா பார்த்த… நான் எத்தனை சினிமா பார்த்தேன் தெரியுமா?’’ – லாக்டவுனில் கல்லூரிகள் மூடப்பட்டதால் வீட்டடங்கில் இருக்கும் மாணவர்கள் பலரும் செல்போனில் இப்படி பேசிக்கொண்டிருக்கையில்,நமக்குபோன் போட்டு,
’’நான் இந்த லாக்டவுனில் 30 நாட்கள், 40 நாட்கள் என்று குறுகிய கால படிப்பாக தேர்ந்தெடுத்து லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 13 பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலமாகவே படித்து 45 சான்றிதழ்கள் பெற்றிருக்கிறேன்’’என்று ஷாக் கொடுத்தார் கல்லூரி மாணவி அமலாகோஷ்.
பெங்களூருவில் எம்.எஸ்.சி (தடயவியல்- குற்றவியல்) படித்துக்கொண்டே, சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் தயாராகி வருகிறார் 20 வயதான அமலா. சென்னை மாதவரத்தில் வீட்டடங்கில் இருந்துகொண்டுதான் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அமலா, ‘’வீணே பொழுதை கழிக்காமல் லாக்டவுனில் உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்று நிறைய புத்தகங்கள் படித்துக்கொண்டிருந்தேன். புத்தகங்களை புரட்டி படிப்பதில்தான் ஆர்வமே தவிர, ஆன்லைன் பக்கம் போவதே பிடிக்காது. ஆனால், லாக்டவுனில் வேறு வழி் இல்லையே.
அதனால் ஆன்லைன் மூலமாக ஏதாவது படித்து, சான்றிதழ் வாங்கலாம் என்று முடிவெடுத்து அதற்கான தேடுதலில் ஈடுபட்டேன். இந்தியா, லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 13 பல்கலைக்கழகங்களில் 30 நாட்கள், 40 நாட்கள் என்று குறுகிய கால படிப்பாக தேர்ந்தெடுத்து, அதிலும் இலவசமாக, இல்லையேல் குறைந்த கட்டணத்தில் உள்ள படிப்பாக தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலமாக படித்து, 45 சான்றிதழ்கள் பெற்றுவிட்டேன்.
ஒவ்வொரு படிப்புக்கும் தினமும் டெஸ்ட் இருக்கும். ஒவ்வொரு டெஸ்ட்டிலும் பாஸ் செய்தால்தான் அடுத்தகட்டத்திற்கு போகமுடியும். கடைசியாக ஆன்லைன் வழியாகவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் பெற்றிருக்கிறேன்’’என்ற அமலா, பெங்களூருவில் ஜெயின் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி தடயவியல்- குற்றவியல் படித்துவிட்டு, தற்போது எம்.எஸ்.சி. தடயவியல்- குற்றவியல் படித்து வருகிறார். லாக்டவுன் என்பதால் அம்மா, அப்பாவுடன் மாதவரம் வீட்டுக்கு வந்துவிட்டார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள கிங் மேக்கர்ஸ் அகாடமியில் சிவில் தேர்வுக்கும் படித்து வரும் அமலாகோஷின் பூர்வீகம் கேரள மாநிலம் கொல்லம். அப்பா அஜய்கோஷ், அம்மா மாயாதேவி.
தமிழகத்தில் இல்லாத தடயவியல் படிப்பை தேடிப்பிடித்து போய் ஏன் படிக்கிறீர்கள்? என்று கேட்டபோது, ‘’ க்ரைம் சம்பந்தப்பட்ட படங்களையே அதிகம் பார்ப்பேன். தவிர, பாலியல் வன்கொடுமைகளை எல்லாம் பார்த்து கொதித்துப்போய் உண்மை குற்றவாளிகளை அடையாளம் காட்ட வேண்டும் என்று மனசு கிடந்து துடிக்கும்.
அதற்கான முக்கி்ய படிப்புதான் தடயவியல் – குற்றவியல். அதனால் அதை படிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். தமிழ்நாட்டில் அந்த படிப்பு இல்லாததால் பெங்களூருவில் ஜெயின் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி தடயவியல்- குற்றவியல் படித்தேன். இப்போதுதான் தமிழ்நாட்டில் திண்டுக்கல்லில் அந்த படிப்பை படிக்கும் வசதி வந்திருக்கிறது. எம்.எஸ்.சியும் படித்து வருகிறேன்.’’என்றவரிடம்,
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் எண்ணம் எப்படி வந்தது? என்று கேட்டபோது, ‘’துப்பறியும்போது என்னென்ன தடயங்களை சேகரிக்க வேண்டும்? என்று காவல்துறையினருக்கு அறிவிறுத்தலாம் என்று கல்லூரி பேராசிரியரிடம் என் எண்ணத்தை சொன்னேன். அவர் அதற்கு ஒப்புதல் அளித்ததால், சென்னை வந்து மாநகர கமிஷனரை சந்திக்க சென்றேன்.
அப்போது ஏ.கே.விஸ்வநாதன் சார்தான் கமிஷனர். கமிஷனரை சந்திக்க பி.ஆர்.ஓவிடம் அனுமதி கேட்டபோது, ‘நீ ஸ்டூடண்ட் தானம்மா.. போய் புரபசர அனுப்பு’ன்னு சொல்லிட்டார். அதிகாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த நான், அந்த அதிகாரமிக்க இடத்திற்கு வருவதற்காகத்தான் சென்னை அண்ணாநகரில் உள்ள கிங் மேக்கர்ஸ் அகாடமியில் சிவில் தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கிறேன். நிச்சயம் அதிகாரம் என் கையில் வரும்’’என்றார் உறுதியான குரலில்.
No comments:
Post a Comment