இந்தியாவில் தடை செய்யப்பட்ட 59 சீன செயலி நிறுவனங்களுக்கு உள்ள வெளிநாட்டு அரசுகளின் தொடர்பு, உள்ளடக்க தணிக்கை உள்ளிட்டவை தொடர்பான 77 கேள்விகளுக்கு பதிலளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன வீரர்கள் இடையே கைகலப்பு, மோதல் ஏற்பட்டது. தனது நிலையை தன்னிச்சையாக மாற்றிய சீன வீரர்கள், கற்கள், இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றில் தாக்கியதில், நம் வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன வீரர்கள் சார்பில் 43 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை சீன ராணுவம் அதிகாரபூர்வமாக வெளியிடாமல் மறைத்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாடு மற்றும் தகவல் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருப்பதாக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு அதிரடியாக தடை விதித்தது.
சீன செயலிக்கு தடை விதித்ததற்கு பின்னர், எந்தவொரு உள்ளடக்கத்தையும் திருத்தவோ, விளம்பரப்படுத்தவோ அல்லது குறைக்கவோ எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் செயல்பட்டதா உள்பட 77 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு டிக்டாக் மற்றும் அலிபாபாவின் யு.சி., பிரவுசர் உள்ளிட்ட 59 தடைசெய்யப்பட்ட செயலிகளுக்கு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, கடந்தாண்டு காஷ்மீரில் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் உள்ளடக்கம் தணிக்கை செய்யப்பட்டதா என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. புல்வாமா தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டது.
மேலும் இந்தியாவில் உள்ள நிறுவன நிர்வாகிகள், திரைப்பட நட்சத்திரங்கள், சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் அல்லது பத்திரிகையாளர்களுடன் எந்தவொரு உள்ளடக்கத்தையும் விளம்பரப்படுத்த தொடர்பு கொண்டனரா, வணிக நோக்கங்களுக்காக இல்லாவிட்டாலும் கூட தொடர்பில் இருந்தனரா எனவும், பயனர் குறித்த தகவல்களை மறைமுகமாக பயன்படுத்தியதற்காக, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் அல்லது வேறு இடங்களில் எந்தவொரு விசாரணையையும் எதிர்கொண்டிருக்கிறீர்களா என்று மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
மூன்று வாரங்களுக்குள் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு, மத்திய அரசு சீன நிறுவனங்களுக்கு கெடு விதித்துள்ளது. இந்நிலையில், 'இந்திய அரசு முன்வைத்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க தயார் செய்து வருவதாகவும், இந்தியாவின் அனைத்து சட்டங்களுக்கும் இணங்குவதாகவும், பயனர்களின் தரவுகள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையே தங்களுடைய முன்னுரிமை' என டிக்டாக் கூறியுள்ளது. அலிபாபா உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள், எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment