
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை விரைவில் 11 லட்சத்தை தொடும் அபாய நிலையில் உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழந்து வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் பாதித்தவர்களில் பலர் குணமடைகின்றனர்; இறப்பு சதவீதம் மிகக்குறைவு என அரசு கூறினாலும், பாதித்த பிறகு ஏதாவது நேர்ந்தால் என்ன செய்வது என்ற பயமே பலரிடம் உள்ளது.
ஏற்கனவே சுகாதாரத்துறை அளிக்கும் பலி பட்டியலும், மயான பதிவேட்டில் உள்ள பலியானோர் எண்ணிக்கையும் நிறைய மாறுபடுகிறது. சென்னை, மதுரையில் மூன்றில் ஒரு பங்கு பலி மறைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது ஒருபுறமிருக்க பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனாவால், உடலில் அதிகம் பாதிப்படைந்தவர்கள் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனாவால், உடலில் அதிகம் பாதிப்படைந்தவர்கள் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில் பிளாஸ்மா தானம் மற்றும் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை, அரசு மக்களிடம் ஏற்படுத்துவதில் பின்னடைவு இருப்பதாகவே சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். முதலில் பிளாஸ்மா சிகிச்சையை பற்றி தெரிந்து கொள்வோம். கொரோனா பாதிப்பில் இருந்து குணமான ஒருவரின் ரத்தத்தில், அந்த நோயை எதிர்த்து போராடக்கூடிய ஆற்றல் மிக்க எதிர்ப்பணுக்கள் இருக்கும்.
இவற்றை ரத்தத்தில் இருந்து பிரித்தெடுத்து, கொரோனாவால் உடல்நலம் அதிகம் பாதிக்கப்படுபவரின், உடலில் செலுத்தி குணமடைய வைப்பதே பிளாஸ்மா சிகிச்சை எனப்படுகிறது. இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் இந்த சிகிச்சை செயல்படுத்தப்பட்டு நல்ல பலனை தந்துள்ளது. ரத்த தானம் செய்யும் நேரம்தான் இதற்காக ஆவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சென்னையில் இன்று முதல் பிளாஸ்மா வங்கி செயல்பட உள்ளதாகவும், விரைவில் மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு முன்பே எடுத்திருக்க வேண்டும்.
அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு அரசுத்திட்டங்கள் மற்றும் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மற்ற மாநில மக்களும் அசாம் வந்து பிளாஸ்மா தானம் செய்யலாம். அவர்களுக்குத் தேவையான விமான டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். இவரது அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
கர்நாடக அரசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுமென அறிவித்துள்ளது. தற்போது காலம் கடந்தாலும், இதுதொடர்பான விழிப்புணர்வை குணமடைந்தவர்களிடமும், பொதுமக்களிடமும் தமிழக அரசு கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். விரைவில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும், பிளாஸ்மா சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
குணமடைந்தவர்களும் தாங்களாகவே விரும்பி பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். இதுதொடர்பாக டிவி, செய்தித்தாள்கள் மூலமாகவும் அரசு விளம்பரப்படுத்தி விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் உயிரிழப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்.
No comments:
Post a Comment