
✅கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகமாக பரவிய நிலையில், தற்போது குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் பேருக்கு பாதிப்பு என்ற எண்ணிக்கை, சமீப நாட்களில் குறைந்துள்ளது. அதே சமயம், பிற மாவட்டங்களில் பாதிப்பு அசுர வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் சென்னையைவிட மாவட்டங்களில் 3 மடங்கு அதிகமாக நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
✅ஆனால் இதை காட்டி சென்னையில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக மார்தட்டுகிறது தமிழக சுகாதாரத்துறை. ஆனால் அது உண்மை அல்ல. காரணம், சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதற்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே அங்கிருந்து மக்கள் தங்களது குடும்பத்துடன் வெளியேறி சொந்த ஊர்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். குறிப்பாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு பலர் சென்றுவிட்டனர்.
✅இ-பாஸ் பெற்று முறைப்படி பயணம் செய்தவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சட்ட விரோதமாக இடம்பெயர்ந்தவர்களும் உண்டு. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தங்களது மாவட்டத்துக்குள் நுழையும்போது, சோதனைச்சாவடிகளில் சரியான பரிசோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்றால், அதுவும் இல்லை. முகவரி மற்றும் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பிவிட்டனர். பரிசோதனை செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை.
✅ஒருவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால், அதன் ரிசல்ட் வரும்வரை கண்டிப்பாக அந்த நபர் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், பரிசோதனை செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள், ‘’நீங்கள் இப்போது போகலாம். ரிசல்ட் வந்தவுடன் நாங்கள் அழைக்கிறோம், அப்போது வந்தால்போதும்’’ எனக்கூறி அனுப்பி உள்ளனர்.
✅இவ்வாறு சென்னையில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் சோதனைச்சாவடிகளை கடந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். அப்படி சென்றவர்களில் தொற்று இல்லாதவர்களால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தொற்றுடன் இடம் பெயர்ந்து சொந்த ஊர் வந்தவர்கள் ரிசல்ட் வருவதற்கு முன்பே அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், குடியிருப்பு பகுதி மக்களுடன் தொடர்பு கொண்டதால்தான் மாவட்டங்களில் சங்கிலி தொடராக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
✅மற்றொன்று ஊரடங்கு உள்ளிட்ட அறிவிப்புகளை மறுநாளே கடுமையாக செயல்படுத்துவது அவசியம். மக்கள் நலன் என்று பார்த்து 2 நாட்களுக்கு முன்பே முழு ஊரடங்கை அறிவித்து, அதை செயல்படுத்துவதற்குள் கூட்டம் குவிந்து நோய் பரவலுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
✅தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்துகிறது. ஆனால் சனிக்கிழமையே மட்டன், சிக்கன், மீன், காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்து, சமூக இடைவெளி காற்றில் பறந்து, கொரோனாவும் கூடவே வந்துவிடுகிறது. தமிழக அரசின் இதுபோன்ற அலட்சிய நடவடிக்கைகளால்தான் மாவட்டங்களில் சென்னையைவிட கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
✅தளர்வுடன் கூடிய ஊரடங்கு என்பதை மக்கள் ஊரடங்காகவே பார்க்கவில்லை. எனவே மக்கள் கூட்டமாக கூடுவதை அறவே தவிர்க்க தமிழக அரசு கண்டிப்பை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். மேலும் பரிசோதனை செய்தவர்களை ரிசல்ட் வரும்வரை கண்டிப்பாக தனிமைப்படுத்தவேண்டும். இதில் அரசின் அலட்சியம் தொடர்ந்தால், கொரோனா ஆட்டத்தை தடுக்க முடியாது.
No comments:
Post a Comment