We Give Everything First

Friday, July 10, 2020

தினத்தந்தி தலையங்கம்(10.07.2020) - வரப்போகிறது தனியார் ரெயில்கள்!



உலகம் முழுவதும் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், பல தாராளமயமாக்கல் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பல பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை விற்கும்போது, தனியார் நிறுவனங்கள் அதைவாங்கி, அவர்கள் பங்குகொள்ள வகை செய்யப்படுகின்றன. போக்குவரத்தை எடுத்துக்கொண்டால், விமான போக்குவரத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கத் தொடங்கியதில் இருந்து, இந்தியா முழுவதும் பல புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு, ஏராளமான இடங்களில் விமானச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல், தனியார் கப்பல்களும் ஓடுகின்றன.


ரெயில்வே துறையை எடுத்துக்கொண்டால், அரசுக்கு அதிக பங்குகள் கொண்ட ஐ.ஆர்.சி.டி.சி. என்று அழைக்கப்படும் இந்திய ரெயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில், டெல்லி-லக்னோ, மும்பை-ஆமதாபாத் வழித்தடங்களில் தேஜஸ் ரெயில்களைவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்போது, இந்தியா முழுவதும் 109 வழித்தடங்களில் 151 தனியார் ரெயில்களைவிட, மத்திய அரசாங்கம் முடிவு செய்து, இந்த ரெயில்களை விடுவதற்கான தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடும், வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும்.


தற்போது, 2,800 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஓடுகின்றன. இந்த 151 புதிய தனியார் ரெயில்கள் என்பது, இதில் 5 சதவீதம்தான். 2019-2020-ம் ஆண்டில் 840 கோடி பயணிகள், ரெயில்களில் பயணம் செய்தார்கள் என்றும், மேலும் 5 கோடி பயணிகளுக்கு இடம் கிடைக்கவில்லை என்றும், கோடைக்கால மற்றும் விழாக்கால நேரங்களில் 13.3 சதவீத பயணிகளுக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் ரெயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.


இப்போதுள்ள நிலவரப்படி, 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த தனியார் ரெயில்களை விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் 12 ரெயில்கள் சென்று வருவதற்கான அனுமதி வழங்கப்பட இருக்கிறது. சென்னையில் இருந்து மதுரை, மும்பை, மங்களூர், கோவை, திருநெல்வேலி, திருச்சி, கன்னியாகுமரி ஆகிய வழித்தடங்களிலும், புதுச்சேரி-செகந்திராபாத், திருநெல்வேலி-கோவை, எர்ணாகுளம்-கன்னியாகுமரி, சென்னை-டெல்லி, கொச்சுவேலி-கவுகாத்தி (சென்னை வழியாக) ஆகிய வழித்தடங்களிலும் தனியார் ரெயில்களை ஓட்டுவதற்கு அனுமதியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த தனியார் ரெயில்கள் நவீன வசதிகளைக்கொண்ட ரெயில்களாக இருக்கும். இந்த ரெயில்களை ஓட்டும் டிரைவர்களும், கார்டுகளும் ரெயில்வே ஊழியர்களாகத்தான் இருப்பார்கள். விமானப் பயணத்தை மேற்கொள்பவர்களும், குளுமை வசதி செய்யப்பட்ட பஸ்களில் பயணம் செய்பவர்களும், இந்த நவீன ரெயில்களை நாடும்வகையில், அனைத்து வசதிகளும் செய்யப்பட இருக்கின்றன. இதனால், இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ரெயில்களோ, ரெயில்வே ஊழியர்களின் எண்ணிக்கையோ குறைக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


தனியார் ரெயில்களுக்கு அதிக கட்டணம் இருக்கும் சூழ்நிலையில், தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ரெயில்களில் அதைவிட கட்டணம் மிகக்குறைவாகவே இருக்கும். எனவே, வசதியான பயணம் வேண்டுமென்று நினைப்பவர்கள் மட்டும் கூடுதல் கட்டணத்தை செலுத்தி, தனியார் ரெயில்களில் பயணம் செய்யலாமேதவிர, மற்றவர்கள் எப்போதும் போல தாராளமாக தற்போதைய ரெயில்களில் பயணம் செய்வதில் எந்தத் தடையும் இருக்காது.


மற்றொரு வித்தியாசம் என்னவென்றால், தனியார் ரெயில்களில் இலவச பாஸ்களோ, சலுகை கட்டணமோ நிச்சயமாக இருக்காது. எனவே, தனியார் ரெயில்களை விடுவதில், இப்போதுள்ள பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஒரு பக்கம் புதிய முதலீடுகள் வருகின்றன, புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. 


எல்லா பயணிகளும் இந்த தனியார் ரெயிலை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லாவிட்டாலும், மற்றொரு பக்கம் எனக்கு வசதியான பயணம் வேண்டும், நான் விமானத்தில் பயணம் செய்வதற்கு பதிலாக கூடுதலாக கட்டணம் செலுத்தி நவீன ரெயில்களில் பயணம் செய்வேன் என்று விரும்பும் பயணிகளுக்கு அதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் விதமாக, ரெயில்வே நிர்வாகத்தில் தனியார் பங்களிப்புகளை வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.

No comments:

Post a Comment