We Give Everything First

Saturday, May 16, 2020

ஊரடங்கில் அதிகம் கம்ப்யூட்டர், டி.வி. பார்க்கிறீர்களா? கண்களில் கவனம் தேவை

ஊரடங்கு நீடித்துக்கொண்டு இருக்கிற இந்த நேரத்தில் அனைவரும் மணிக்கணக்கில் இடைவிடாமல் தொடர்ந்து கம்ப்யூட்டர்களையும், டி.வி.க்களையும் அதிகநேரம் பார்க்கிறார்கள். இது அவர்களது கண்களுக்கு சோர்வையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தி பல்வேறு கண் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.




ஊரடங்கு நீடித்துக்கொண்டு இருக்கிற இந்த நேரத்தில் மாணவர்களும், தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்களும் மணிக்கணக்கில் இடைவிடாமல் தொடர்ந்து கம்ப்யூட்டர்களையும், செல்போன்களையும், டி.வி.க்களையும் அதிகநேரம் பார்க்கிறார்கள். இது அவர்களது கண்களுக்கு சோர்வையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தி பல்வேறு கண் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்ப்பதால் கண் நலிசோர்வு ஏற்படும். இத்துடன், தலைவலி, கழுத்து, தோள்பட்டை அல்லது முதுகு வலிகள் மற்றும் ஒட்டுமொத்த சோர்வுடன், தூக்கப்பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். கம்ப்யூட்டர் மூலம் வேலை செய்யும்போது, கண்கள் எப்போதும், எல்லா சமயங்களிலும் ‘போக்கஸ்’ மற்றும் ‘ரீபோக்கஸ்’ செய்ய வேண்டும். கண்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கக்கூடிய மற்றும் மாறிக்கொண்டிருக்கக்கூடிய படங்களுக்கு, உருவங்களுக்கு, பிம்பங்களுக்கு ‘ரீஆக்ட்’ செய்யக்கூடும். இதன் விளைவாக கண் தசைகளில் நிறைய சோர்வு விளைவிக்கக்கூடும்.


ஒரு டிஜிட்டல் திரையை தொடர்ந்து பார்க்கும்போது, இயல்பாக கண் சிமிட்ட தவறுகிறோம். இது கண்களை உலரச்செய்து, பார்வையை மங்கச்செய்கிறது.

கண் பிரச்சினைகளை குறைக்க...

கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அளவுக்கு அதிக வெளிச்சம் அல்லது குறைவான வெளிச்சம், கண் பிரச்சினைகளை விளைவிக்கிறது. வெளிச்ச நிலை, எழுத்துருவின் அளவு, ‘மானிட்டர்’ வைக்கப்பட்டிருக்கும் உயரம் மற்றும் திரையில் இருந்து அமர்ந்திருக்கும் தூரம் உள்பட கம்ப்யூட்டர் திரை அமைப்புகளை சவுகரியமாக வாசிப்பதற்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் திரைகளை பயன்படுத்தும்போது உரிய காலஅளவுகளில் இடைவேளைகளை எடுத்துக்கொள்ளவும். 20-20-20 விதியை பயன்படுத்தவும். அதாவது 20 அடி தூரத்திலுள்ள இடத்தை, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை 20 நொடிகள் பார்க்க வேண்டும். வழக்கமான வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்கள் செய்வது, கண் பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். ஆரோக்கியமான உணவு முறையானது வயதுடன் தொடர்புடைய கண் பிரச்சினைகளை குறைக்கக்கூடும். தவறாமல் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் கண்களுக்கு ஆக்சிஜன் செல்லும் அளவை அதிகரிக்கும். நச்சுக்களை அகற்ற உதவும்.

நீண்ட நேரம் டி.வி. பார்ப்பது, பொதுவாக கம்ப்யூட்டரை பார்ப்பதால் ஏற்படும் நோய் பாதிப்பு அறிகுறியை உருவாக்காது, எனினும், அதை பார்ப்பதற்காக நீங்கள் அமர்ந்திருக்கும் தூரத்தை இது சார்ந்திருக்கும். டி.வி.க்கு மிக நெருக்கமாக அமர்ந்து பார்ப்பது கண் அழுத்தத்தையும், கழுத்தில் வலியுடன் கூடிய அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

கண்களை ஈரப்பதம் உள்ளதாகவும், புத்துணர்வு உள்ளதாகவும் வைத்திருப்பதற்கு கண்களை மூடி திறக்கின்ற வழக்கத்தை பின்பற்றவும். ஆரோக்கியமான கண்களுக்கு, கண்களை மசாஜ் செய்வது ஒரு நிவாரணமாக கருதப்படுகிறது. கைகளில் சூடு ஏறுகின்ற வரை நன்றாக தேய்த்து, கண்களுக்கு மேலே மிருதுவாக அழுத்தவும். ஒரு இயற்கையான வழிமுறையில் கண் தசைகளை தளர்வாக்குவதற்கு இது உதவும்.

சிறு உடற்பயிற்சி

பார்வைத்திறன் மோசமாகி விடாமல் பாதுகாக்க உதவும் என்பதால், வீடுகளுக்கு வெளிப்புறத்தில் காற்றோட்டமுள்ள இடங்களில் அதிக நேரம் செலவிடுவது முக்கியமாகும். கட்டிடங்களுக்கு உள்ளேயே நேரத்தை செலவிடுவது கிட்டப்பார்வை ஏற்படும் இடரை அதிகரிக்கக்கூடும். கம்ப்யூட்டர் பயன்பாட்டோடு தொடர்புடைய தலைவலி, கழுத்து, முதுகு மற்றும் தோள்பட்டை வலி ஏற்படும் இடரை குறைப்பதற்கு, குறைந்தது ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை திரையை பார்ப்பதில் இருந்து விலகி செல்லவும். எழுந்து நடக்கவும், கைகள், கால்கள், கழுத்து மற்றும் தோள்பட்டையை நீட்டி, மடக்கி சிறு உடற்பயிற்சிகள் செய்வது அழுத்தத்தையும், தசை களைப்பையும் குறைக்க உதவும்.

ஆகவே, எந்த வகையான டிஜிட்டல் திரையாக இருப்பினும், நீண்டநேரம் பார்ப்பதையும், ஒரு கையளவு நீள தூரத்திற்கும் குறைவான இடத்திலிருந்து பார்ப்பதையும் தவிர்ப்பது நல்லது. குறித்த காலஅளவுகளில் கண் பரிசோதனைகள் செய்துகொள்வது, கண் பிரச்சினைகளுக்கான இடரில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். கண் பரிசோதனையின்போது, உங்களது தினசரி கம்ப்யூட்டர் பயன்பாடு குறித்த உண்மையான தகவலை டாக்டரிடம் தெரிவிக்கவும்.

கண் ஆரோக்கியம் மீது சரியான அக்கறை காட்டுவது பார்வைத்திறன் பிரச்சினைகளை குறைக்கும். குறித்த கால அளவுகளில் டாக்டரை சந்தித்து, கண் பரிசோதனை செய்து கொள்வது முறையான பார்வைத்திறன் நீடிப்பதை உறுதிசெய்யும். டாக்டரால் பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளை தவறாது செயல்படுத்துவது கண் பிரச்சினைகளை முற்றிலுமாக குறைப்பதற்கு நிச்சயம் உதவும்.


Source: Internet

"Stay Home , Stay Safe"

No comments:

Post a Comment